Puri Jagannath Temple: 46 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கருவூல அறை! – உள்ளே இருப்பது என்ன?

ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியின் மூலம் அங்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த வெற்றிக்காக, பா.ஜ.க கையிலெடுத்த பிரசார ஆயுதங்களில் ஒன்று, பூரி ஜெகந்நாத் கோயில் கருவூல அறையின் சாவி காணாமல் போன விவகாரம். பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, கோயில் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக வெளிப்படையாகப் பிரசாரங்களில் முழங்கினார்.

பூரி ஜெகந்நாதர் கோயில்

இந்த நிலையில், அத்தகைய கருவூல அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கருவூல அறையில் நுழைய மாநில அரசால் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத், ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் (SJTA) தலைமை நிர்வாகி அரபிந்தா பதீ உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

கருவூல அறையின் திறப்பு குறித்து ஒடிசா முதல்வர் அலுவலகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஜெகந்நாதரின் விருப்பத்தின் பேரில் முன்பு கோயிலின் நான்கு கதவுகள் திறக்கப்பட்டது. இன்று மீண்டும் அவரின் விருப்பத்தின் பேரில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய நோக்கத்திற்காக கருவூல அறை திறக்கப்பட்டிருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறது.

ஒடிசா பத்திரிகை தகவலின்படி, ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் இந்த அறையில் இருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மன்னர் அனங்கபீமா தேவ், ஜெகந்நாதருக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் மத்தாஸ் (தங்க நாணயங்கள்) மதிப்பிலான தங்கத்தை நன்கொடையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருவூல அறையில், வெளிப்புற மற்றும் உட்புற என இரண்டு கருவூலங்கள் இருக்கிறது.

ஒடிசா பூரி ஜெகந்நாத் கோயில்

இதில், வெளிப்புற கருவூலத்தில் ஜெகந்நாதரின் சுன முகுதம் மற்றும் தலா 120 தோலா (1.4 கிலோகிராம் ) எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்கள் (ஹரிதகந்தி மாலி) இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், உட்புற கருவூலத்தில் 74 தங்க ஆபரணங்கள் இருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் 100 தோலாவுக்கு (1.17 கிலோகிராம்) மேல் எடை கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இவை தவிர, தங்கம், வைரம், பவளம், முத்துக்களால் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட வெள்ளி நகைகளும் கருவூலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.