டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. சேலத்தைத் தொடர்ந்து, நேற்று முதல் கோவை ஶ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. மாலை நடந்த முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
திருப்பூர் அணியின் கேப்டன் பொறுப்பை சாய் கிஷோர் கேப்டன் ஏற்ற நிலையில், அந்த அணி டாஸ் வென்று முதலில் பௌலிங் தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே திருப்பூர் அணி விக்கெட்களை எடுத்து, மதுரை அணிக்கு அழுத்தம் கொடுத்தது. சசிதேவின் கேமியோவால் மதுரை 20 ஓவர்களுக்கு 156 ரன்கள் எடுத்தது. திருப்பூர் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை இழந்தாலும் பிறகு நிலைத்து நின்று ஆடியது.
அந்த அணியின் அனிருத் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார். இதன்மூலம் திருப்பூர் அணி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இரவு நடந்த மற்றொரு லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பௌலிங் தேர்வு செய்தது. நெல்லை அணிக்குச் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இருந்தபோதும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து கோவை அணி அசத்தியது.
சோனு யாதவின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி விளையாடியது.
சாய் சுதர்சன் 8 ரன்களில் வெளியேறினாலும் சச்சின், சுரேஷ் இணை நிலைத்து நின்று ஆடியது. மழையால் ஆட்டம் 2 முறை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், பௌலர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதை சரியாகப் பயன்படுத்திய கோவை அணி அடித்து ஆடியது.
அந்த அணியின் சச்சின் 76 ரன்கள் எடுத்தார். 18.3 ஓவர்களிலேயே அந்த அணி சேஸிங் செய்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியுடன் கோவை அணி புள்ளிப்பட்டியிலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.