அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பில் இதில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ட்ரம்ப் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நேராக அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் காயமடைந்த ட்ரம்ப் கீழே குனிய அவரின் பாதுகாவலர்கள் உடனடியாக மேடைக்கு அருகில் வந்து அவரை மீட்டு காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரின் காதில் தோட்டா துளைத்து ரத்தம் வழிய, தனது ஆதரவாளர்களை நோக்கி ட்ரம்ப் கையை உயர்த்தினார்.
பின்னர், உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து தற்போது அவர் நலமாக இருக்கிறார். இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரசாரத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் பலியானார். அதேசமயம், சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்றும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில் வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. மறுபக்கம், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.