இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாக். அரசு முடிவு

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறிப்பாக, பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இம்ரான் கான் – புஷ்ரா பீபி தம்பதிக்கு எதிராக சட்டவிரோத திருமண வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ஒவ்வொன்றாக இம்ரான்கான் ஜாமீன், விடுதலை பெற்றுவருகிறார். ஆனாலும், இம்ரான்கான் மீது புதிய புதிய பிரிவுகளில் பாகிஸ்தான் அரசு வழக்குகளை பதிவு செய்து அவரையும், அவரது மனைவியையும் தொடர்ந்து சிறையில் வைத்துள்ளது.

மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இம்ரான்கானின் கட்சி தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி ஈடுபடுவதாக கூறும் பாகிஸ்தான் அரசு அக்கட்சியை தடை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி மீதான தடை விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தடை செய்யப்பட்டால் போராட்டம், கலவரம் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.