கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். கேரளா சட்டசபையில் தற்காலிக பணியாளரான இவருக்கு எலும்பு சம்பந்தமான பிரச்னை இருந்துவருகிறது. அதற்காக மருந்து வாங்குவதற்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி (சனிக்கிழமை) காலையில் சென்றுள்ளார். தரைதளத்தில் புற நோயாளிக்கான சீட்டு வாங்கிய ரவீந்திரன் மாடிப்படி ஏற முடியாததால் லிஃப்ட்டை பயன்படுத்தி மருத்துவர் இருக்கும் முதல் தளத்துக்குச் செல்ல முயன்றுள்ளார். அதற்காக 11-ம் நம்பர் லிஃப்ட்டுக்குள் சென்றவர் முதல் மாடிக்குச் செல்லும் பட்டனை அழுத்தியுள்ளார். ஆனால், லிஃப்ட் கிரவுண்ட் புளோரை நோக்கிப் புறப்பட்டதுடன் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் பயந்துபோன அவர் அவசர உதவிக்கான அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார். அலாரம் ஒலித்தபின்னரும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, லிஃப்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அவசர உதவி எண்களுக்கு, தன் மொபைல் போன் வழியாக அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் அழைப்புக்கு யாரும் பதிலளிக்கவில்லை. இதற்கிடையே திடீரென லிஃப்ட் குலுங்கியதில் அவரது மொபைல் போனும் கீழே விழுந்து சேதமடைந்திருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் லிஃப்ட்டிலேயே இருந்துள்ளார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் லிஃப்ட்டை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து வாங்கச் சென்ற தனது தந்தையை காணவில்லை என ரவீந்திரனின் உறவினர்கள் மெடிக்கல் காலேஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமையான நேற்று காலையில் மீண்டும் லிஃப்ட்டின் அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார் ரவீந்திரன். அப்போது சிலருக்கு அந்த சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து லிஃப்ட்டை பழுதுபார்த்து திறந்துள்ளனர் ஊழியர்கள். அங்கு, உடல் தளர்வடைந்த நிலையில், இயற்கை உபாதைகளை லிஃப்ட்டிலேயே கழித்தபடி ரவீந்திரன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து ரவீந்திரன் கூறுகையில், “லிஃப்ட்டில் குறிப்பிட்டப்படிருந்த அவசர எண்கள் அனைத்துக்கும் போன் செய்தேன், யாரும் போன் எடுக்கவில்லை” என்றார். கேரள தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் 3 நாள்களாக நோயாளி ஒருவர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விசாரணை நடத்தும்படி சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் லிஃப்ட் ஆப்பரேட்டர்கள் 2 பேர் உப்பட 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ரவீந்திரனை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று சந்தித்தார். பின்னர் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “லிஃப்ட்டில் சிக்கிய நோயாளியின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தவறு செய்த ஊழியர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.