சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி ஆகியோரின் ஆதரவுடனும் அர்ப்பணிப்புடனும் நீண்ட கால முயற்சியின் பின்னர் 2024-2034 காலப்பகுதியில் சுதேச மருத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் மிக உயர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹெல மருத்துவம் நீண்ட காலமாக தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, நாட்டின் நான்கு திசைகளிலும் சுமார் 20,000 பாரம்பரிய மருத்துவர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடக்கும் வகையிலான கொள்கையொன்று இலங்கை வரலாற்றில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையில், புத்திஜீவிகளின் பரந்தளவான பங்கேற்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் சுதேச மருத்துவ தேசிய கொள்கை 2024-2034 இனை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.