துபாயில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் நிறுவ ஒப்பந்தம்

துபாய்,

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கடுமையான கோடைக்காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை கட்டாய மதிய இடைவேளை வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மூலம் டெலிவரியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்காக நகரின் பல்வேறு இடங்களில் ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்விடங்களில் ஊழியர்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் எந்திரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இது காற்றில் இருந்து தூய்மையான குடிநீர் தயாரிக்கும் வகையில் செயல்படக்கூடியது ஆகும்.

இந்த இயந்திரங்களை நிறுவுவது தொடர்பாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணைய லைசென்சிங் ஏஜென்சியின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா யூசெப் அல் அலி மற்றும் மாஜித் அல் புத்தைம் நிறுவனத்தின் அரசு விவகாரத்துறை செயல் இயக்குனர் அலி அல் அப்துல்லா ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் துபாயில் உள்ள 40 ஓய்விடங்களில் இந்த இயந்திரம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக காற்றில் இருந்து தண்ணீரை தயாரிக்கும் முறையில் ஒரு எந்திரம் உருவாக்கப்பட்டு அது சூரிய மின்சக்தியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் அகுவோவும் என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. அமீரகம் பாலைவன பகுதியானதால் இதுபோன்ற எந்திரத்தை வைத்து எந்த விதமான வறட்சியான பகுதியில் இருந்தும் தண்ணீரை தயாரித்து விட முடியும்.

இந்த புதிய எந்திரத்தில் மெல்லிய நானோபைபர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்புதான் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றுகிறது. இதற்கு குறைந்த அளவு மின்சாரமே போதுமானதாகும். எனவே இந்த எந்திரம் சூரிய ஒளியால் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலைவன பகுதிகளில் கூட வைத்து எளிதில் தண்ணீரை பெறலாம்.

தூய்மையான தண்ணீராக இருப்பதால் சேகரிக்கப்பட்டவுடன் பருகவும் முடியும். தினமும் 100 லிட்டர் தண்ணீரை இந்த எந்திரத்தின் மூலம் பெற முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சிக்கனத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த எந்திரம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் இதமான வகையில் தண்ணீரை பெற்று பருக உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.