புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை செய்ய முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்ற கருத்தை மையமாகவைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதேபோல இந்தியாவில் ‘அரசமைப்பு சாசனத்தை காப்பாற்றுவோம்’ என்று எதிர்க்கட்சிகள் கபடநாடகமிட்டு கோஷமிடுகின்றன.
அமெரிக்காவில் இனத்தின் அடிப்படையில் பிரிவினை தூண்டப்படுகிறது. இந்தியாவில் சாதியின்அடிப்படையில் பிரிவினையை தூண்ட முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டின் உதவியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடினார்.
இதன்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க சர்வதேச இடதுசாரிகள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டு இந்திய ஜனநாயகம் வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் ராகுல் காந்தி பேசினார். தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகும் இதே பாணியில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிநடைபெற்றபோது பிரதமர் மோடியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அன்றைய பஞ்சாப் போலீஸாரின் செயல்பாட்டை இந்தியாஒருபோதும் மறக்காது. இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.
அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் ராகுல் காந்தியின் முந்தைய சமூக வலைதள பதிவுகளையும் இணைத்துள்ளார்.
ராகுல் காந்தியின் ஒரு பதிவில், “அச்சத்தில் உறைந்துள்ள சர்வாதிகாரி (மோடி) இந்தியாவின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க விரும்புகிறார்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
ராகுல் காந்தியின் மற்றொரு பதிவில், “மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப் என சர்வாதிகாரிகளின் பெயர்கள் எம் என்ற எழுத்தில் தொடங்குவது ஏன் என்பது தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோராஸ், இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாஜக வட்டாரங்கள் குற்றம் சாட்டின. அமித் மாளவியா தனது சமூக வலைதள பதிவில் ஜார்ஜ் சோராஸையும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
பாஜகவின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
டொனால்டு ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் 3 சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த 2013-ம் ஆண்டு பிரதமர் மோடி பங்கேற்ற பாட்னா பிரச்சார கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன. பீமா கொரேகானில் மோடியைகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இவ்வாறு ஷெசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.