பொள்ளாச்சியில் கனமழை: வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக பொள்ளாச்சி – வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழை காரணமாக கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வால்பாறை பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டதால், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக வால்பாறை, பொள்ளாச்சி, ஆழியாறு, ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி – வால்பாறை மலைப்பாதையில் 23வது, 24வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மரங்கள் வேருடன் சாலையில் சரிந்தன. அத்துடன் மண் மற்றும் பெரும் கற்கள் சாலையில் உருண்டு விழுந்ததால் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 7 மணியளவில் தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மரங்களை வெட்டியும், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் குவிந்த மண் மற்றும் கற்களை அகற்றினர்.இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட நேரம் மலைப்பாதையில் காத்திருந்தன.



இதே போல் ஆனைமலை தாலுகாவில் ஒடையகுளம் அறிவொளி நகரில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவரது வீட்டின் சுவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த செந்தில்குமாரின் குடும்பம் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இதையடுத்து வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தார்.

வால்பாறையில் பெய்து வரும் கனமழையால், கவியருவின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த இரண்டு தினங்களாக அனுமதி மறுத்து நிலையில் இன்று, அதிகாலை முதலே கவியருவியில் காட்டாற்று வெள்ளம் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி கொட்டியதால் 3-வது நாளாக அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வால்பாறை-169, சோலையாறு – 140 , பரம்பிக்குளம் – 80, ஆழியாறு – 49, மேல்நீராறு – 232, கீழ்நீராறு – 170, காடம்பாறை -5, சர்க்கார்பதி – 71, மணக்கடவு -92, தூணக்கடவு – 69, பெருவாரிபள்ளம் -87, அப்பர் ஆழியாறு -10, பொள்ளாச்சி -86.3, நல்லாறு -54, நெகமம் -37, சுல்தான்பேட்டை – 15, பெதப்பம்பட்டி -114 பதிவாகி இருந்தது.

வால்பாறையில் கனமழை தொடர்வதால் கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடிகிறது. இதனால் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆற்றுப்பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.