மூணாறு: தொடர் மழையினால் மூணாறு கேப்ரோடு அருகே மண்சரிவு அதிகரித்து வருகிறது. ஆகவே மூணாறு-பூப்பாறை சாலை போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை வலுவடைந்துள்ளது. குறிப்பாக மூணாறு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இரவு, பகலாக தொடரும் கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மூணாறு கணபதி கோயில் அருகில் இன்று மண் சரிந்து விழுந்தது. இதில் கோயிலின் மேற்கூரை சேதமடைந்தது. கோயிலுக்கு அருகில் உள்ள கட்டிடங்களும் மண் சரிவு அபாயத்தில் உள்ளன.
அதேபோல் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பள்ளிவாசல் எஸ்டேட் அருகே சாலையில் பாறை கற்கள் உருண்டு விழுந்தது. அப்போது வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும் மூணாறு மாட்டுப்பட்டி சாலை, கேப்ரோடு, மறையூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தேவிகுளம் அருகே கேப்ரோடு பகுதிகளில் மண்சரிவு அதிகம் உள்ளது. ஆகவே மூணாறு-பூப்பாறை வழித்தட பயணத்துக்கு தற்காலிகமாக தடை விதித்து தேவிகுளம் சார் ஆட்சியர் ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.டாப் டிவிஷன் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகே இன்று மண் மற்றும் மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.இதே போல் மூணாறில் தேயிலை தோட்ட மண்டல அலுவலகம் அருகே, பழைய மூணாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ளது.
பாம்பாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோயில்கடவு தென்காசிநாதர் கோயிலை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மூணாறின் பல பகுதிகளிலும் மண்சரிவு, நீர்ப்பெருக்கு அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே மூணாறுக்கு வருபவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி இடுக்கி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.