கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 34. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மூன்று 3 மகன்கள் உள்ளனர். இவர் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றினார். மனைவி குழந்தைகள் சொந்த ஊரில் வசிக்கும் நிலையில் திருநாவுக்கரசு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரும் போலீஸ் குடியிருப்பை ஒட்டி வசிக்கும் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். திருநாவுக்கரசு டூட்டி முடிந்த பிறகு அந்த நண்பருடன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த நண்பரின் வீட்டுக்கு செல்கின்ற அளவுக்கு இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நண்பரின் மகளான 16 வயது சிறுமியிடம் திருநாவுக்கரசு பழகத் தொடங்கியுள்ளார். சிறுமியிடம் செல்போனில் பேசி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த 8-ம் தேதி நண்பரின் மகளான சிறுமியை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்துள்ளார் திருநாவுக்கரசு. பின்னர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதுடன் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லபடுகிறது. இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ், பெண் அலுவலருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். திருநாவுக்கரசு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தததை உறுதி செய்து கொண்டு பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் திருநாவுக்கரசை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மாவட்ட சிறையில் அடைத்தனர். முன்னதாக இதையறிந்த அறிந்த எஸ்.பி மீனா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான திருநாவுக்கரசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். திருநாவுக்கரசின் ஒழுங்கீன செயல்பாட்டால் ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.