புதுடெல்லி: மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட இவர்கள் ஓய்வுபெற்றதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆகவும் அக்கட்சி தலைமையிலான என்டிஏ-வின் பலம் 101 ஆகவும் குறைந்துள்ளது.
எனினும் கட்சி சாராத 7 நியமன உறுப்பினர்கள், 2 சுயேச்சைகள் மற்றும் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற நட்பு கட்சிகளின் உதவியுடன் முக்கிய மசோதாக்களை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜகவால் நிறைவேற்ற முடியும்.
நியமன உறுப்பினர்களுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப் பப்பட்டால் பாஜக மற்றவர் களை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்எல்ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
12 பேர் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறன்றனர். இந்த இடங்களுக்கு கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறை ஆளுமைகளை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.
மாநிலங்களவையில் தற்போது 4 நியமன உறுப்பினர்கள், ஜம்மு காஷ்மீரிலிந்து 4 பேர், அசாம், பிஹார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இருவர், ஹரியாணா, தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் இருந்து ஒருவர் என மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன.