கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு (இலவச வீட்டு உரிமைப்பத்திரம்) “ரண்தொர” பாரம்பரிய உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (ஜூலை 17 ஆம் திகதி) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.W.S.சத்யானந்த தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் “ரண்தொர” பாரம்பரிய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கும் போது கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு நகரம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் விசேட திட்டத்தின் படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அத்துடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வழிகாட்டலுடன், அமைச்சின் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, மற்றும் அந்த நிறுவனங்களின் அனைத்து அதிகாரிகளின் ஆதரவுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார். ,
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு பல வருடங்களாக இலவச வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதில் சில தடைகள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் சத்யானந்த, சட்ட விடயங்கள் மற்றும் கொள்கை விடயங்கள் காரணமாக வீட்டு உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.