பெர்லின்,
உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ். ஆடம்பர கார்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வடிவமைப்பு குழுவின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டவர் இயன் கெமரூன். இங்கிலாந்தை சேர்ந்த இயன் கெமரூன் பல ஆண்டுகளாக ரோல்ஸ் ராய்ஸ் கார் தலைமை வடிவமைப்பாளராக செயலப்ட்டு வந்தார். பல ஆண்டுகளாக பணியில் இருந்த இவர் பின்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனிடையே, 74 வயதான கெமரூன் ஜெர்மனியின் ஹெர்சிங் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனது மனைவி கெலோஸ் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், இயன் கெமரூன் வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதை தடுக்க முயன்ற கெமரூனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொள்ளையர்கள் கெமரூனின் மனைவி கெலோசையும் கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் பண்ணை வீட்டிற்கு அருகே உள்ள வீட்டிற்குள் நுழைந்து உயிர் பிழைத்துள்ளார். அங்கிருந்தவாறு அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இயன் கெமரூனின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு கெமரூன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கெமரூனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கெமரூனின் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.