வரலாற்று சிறப்பு மிக்க லாஹுகல நீலகிரி தூபியில் புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு

லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயணம் மற்றும் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க தூபியின் மையத்திலும் எட்டு மூலைகளிலும் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டன.

நா உயன மடத்தின் பிரதம விஹாராதிபதி வண. அங்குல்கமுவே ஆரியநந்த தேரர் இதன்போது விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அங்கு கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக தொல்லியல் துறையின் உதவியுடன் நீலகிரி தூபி மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய நா உயன மடத்தின் பிரதம விஹாதிதிபதி வண. அங்குல்கமுவே ஆரியநந்த தேரர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் மேற்பார்வையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், இலங்கை விமானப்படை பணியாளர்களின் பங்களிப்புடன் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இரண்டு வருடங்களுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத நடவடிக்கைகளால் புறக்கணிக்கப்பட்ட நீலகிரி தூபியின் மறுசீரமைப்புப் பணிகள், பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல் மற்றும் அப்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் மேற்பார்வையின் கீழ் ஜனவரி 2022 இல் மீண்டும் தொடங்கப்பட்டது.

அம்பாறை லாஹுகல வனப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபி, கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது, இது மன்னர் கவந்திஸ்ஸ அல்லது பாடிகாபயவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது அன்றைய காலத்தில் “வடக்கு சீவாலி பப்பாத விகாரை” என்று அழைக்கப்பட்டது.

மேலும், தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது பல புனித நினைவுச் சின்னங்கள், கலைப்பொருட்கள், சிறிய தூபிகளின் எச்சங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியன கண்டெடுக்கபட்டதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.