Carlos Alcaraz: சந்தேகமே இல்லை… டென்னிஸ் உலகின் அடுத்த அரசன் அல்கரஸ்தான்!

விம்பிள்டன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று அசத்தியிருக்கிறார் லிட்டில் சூப்பர் ஸ்டார் கார்லோஸ் அல்கரஸ்.

25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை டார்கெட் செய்த ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை நேர் செட்களில் வீழ்த்தி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறார் இந்த ஸ்பெய்ன் வீரர். 21 வயதேயான இவருக்கு இது நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது தான் இன்னும் அல்டிமேட்! அடுத்தடுத்து பிரெஞ்ச் ஓப்பன், கிராண்ட் ஸ்லாம் என அடுத்தடுத்து வெற்றிகள் ஈட்டியிருக்கும் இவரது பயணம் எங்கே தொடங்கியது? எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது?

கார்லோஸ் அல்கரஸ்

இந்த விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் நடந்தது. அல்கரஸ், ஜோகோவிச் இருவருக்குமே வெற்றிக்குச் சரிசம வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. அல்கரஸுக்கு ஃபார்ம், வயது எல்லாம் சாதகமாக இருந்தது. ஜோகோவிச்சுமே அட்டகாச ஃபார்மில் தான் இருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்பாக மொத்தம் 2 செட்கள் மட்டுமே இழந்திருந்தார் அவர். ஹோல்கர் ரூன், லாரன்ஸோ மூசெட்டி ஆகியோரை நேர் செட்களில் வீழ்த்தி வந்திருந்தார் அவர். அதனால் அல்கரஸுக்கு இந்தப் போட்டி எளிதாக இருக்காது என்றே நினைத்தனர். ஆனால் எதிர்பார்ப்புகளை நொறுக்கினார் அல்கரஸ்.

டாஸ் வெல்லும் பெரும்பாலான வீரர்கள், ஃபைனல் போன்ற பெரிய போட்டியில் முதலில் சர்வ் செய்யவே நினைப்பார்கள். ஆரம்பத்திலேயே அந்த முதல் புள்ளியைப் பெற்று விடுவது நல்லது என்று கருதுவார்கள். கிரிக்கெட்டில் கூட ஃபைனல்களில் ‘போர்டில் நல்ல ஸ்கோர் போடுவது முக்கியம்’ என்பார்களே, அதைப்போல! ஆனால் அல்கரஸ் வேறு யோசனை வைத்திருந்தார். டாஸ் வென்ற அவர், ஜோகோவிச்சை சர்வ் செய்யுமாறு கூறினார். எந்த உத்வேகத்தில் கூறினாரோ அதே உத்வேகத்தில் விளையாடினார். முதல் கேமே இழுபறியாகச் சென்றது. மொத்தம் 7 முறை டியூஸ் ஆனது. இருந்தாலும் ஜோகோவிச் தன் சர்வை தக்கவைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெகுண்டெழுந்த அல்கரஸ் அதற்கு விடவில்லை. முதல் பிரேக் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு பேரதிர்ச்சியோடு அந்த இறுதிப் போட்டிக்குப் பிள்ளையார் சுழி போட்டார்.

ஜோகோவிச்

ஜோகோவிச்சுக்கு அது வெறும் ஒரு கேம் தடுமாற்றமாக இருக்கும் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் 24 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனை அது ஒட்டுமொத்தமாகப் பின்தங்க வைத்தது. அந்த முதல் கேமில் இருந்து அவர் மீண்டு வரவே இல்லை. இன்னொரு சர்வீஸ் கேமையும் இழந்த அவர், அந்த செட்டை 6-2 என இழந்தார்.

ஜோகோவிச்தான் கம்பேக்குகளுக்குப் பெயர் போனவர் ஆயிற்றே என்று நினைத்திருந்தால், இரண்டாவது செட்டும் முதல் செட்டைப் போலத்தான் தொடங்கியது. இரண்டாவது செட்டின் முதல் சர்வீஸ் கேமையே இழந்து பின்தங்கினார் ஜோகோவிச். முதல் செட்டில் நடந்தது அப்படியே மறுபடியும் நடந்தது. 6-2 என அந்த செட்டையும் தனதாக்கினார் அல்கரஸ்.

இதுபோல் பலமுறை முதலிரு செட்களையும் இழந்துவிட்டு கம்பேக் கொடுத்திருக்கிறார் ஜோகோவிச். ஆனால் அல்கரஸ் இருந்த ஃபார்முக்கு அது நடக்கவில்லை. மூன்றாவது செட்டை டை பிரேக்கர் வரை எடுத்து நீட்டியிருந்தாலும் அவரால் போட்டியை நீட்டிக்க முடியவில்லை. டை பிரேக்கரிலும் அசத்திய அல்கரஸ் வெற்றிகரமாக தன் விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார். ஜோகோவிச் போன்ற ஒரு ஜாம்பவானுக்கு எதிராக ஒரு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியை நேட் செட்களில் வெல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.

கார்லோஸ் அல்கரஸ்

அல்கரஸ் ஆடிய அசாதரமான ஆட்டம்தான் அதைச் சாத்தியப்படுத்தியது. திடீரென தான் போடும் டிராப் பால்கள் மூலமாக ஜோகோவிச் புள்ளிகள் எடுப்பது வழக்கம். ஆனால், அல்கரஸிடம் அது எடுபடவில்லை. ஒட்டுமொத்த கோர்ட்டையும் அநாயசமாக கவர் செய்யும் அவர், எந்த பந்தையும் தவறவிடவில்லை. பாய்ந்து அவர் செய்யும் ரிட்டர்ன்கள் திரும்பி வருவதோடு மட்டுமல்லாமல் சில வின்னர்களாகவே மாறிடுகின்றன. அந்த அளவுக்கு அவர் துல்லியமாகச் செயல்படுகிறார். அதனால்தான் ஜோகோவிச்சால் கூட எதுவும் செய்ய முடியவில்லை.

தன் விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்திருக்கும் அல்கரஸ், நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். மிக இளம் வயதில் தன் நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இவர்தான்! இதுதான் இப்போது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியபோது அதற்கு முட்டுக்கட்டை போட ரஃபேல் நடால் களம் கண்டார். அவர்கள் இருவருக்கும் சவால் கொடுக்க ஜோகோவிச் எழுச்சி பெற்றார். அவர்கள் மாறி மாறி கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுகொண்டிருந்தபோது, அவர்களுக்குச் சவால் கொடுக்கும் வகையில் யாரும் செயல்படவில்லை.

கார்லோஸ் அல்கரஸ்

அதனால் இந்த மும்மூர்த்திகளின் ஓய்வுக்குப் பிறகு டென்னிஸ் உலகை ஆட்சி புரியச் சரியான ஆள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் அல்கரஸ் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கியிருக்கிறார்.

ஏடிபி வரலாற்றில் நம்பர் 1 அரியணை ஏறிய முதல் வீரரான அவர், அவர்களை விடவும் இளம் வயதில் இப்போது 4 கிராண்ட் ஸ்லாம்களை வென்றிருக்கிறார். இவர் இருக்கும் ஃபார்முக்கு இந்த தலைமுறையைச் சார்ந்த எந்தவொரு வீரராலும் அவருக்கு சவாலளிக்க முடியவில்லை.

யானிச் சின்னர், கேஸ்பர் ரூட், அலெக்சாண்டர் ஸ்வெரவ், டேனி மெத்வதேவ் என ஒவ்வொருவருமே அல்கரஸ் முன் தடுமாறினார்கள். கடைசியாக அவர் பங்கேற்ற 7 கிராண்ட் ஸ்லாம் ஃபைனல்களில், 4 வெற்றிகள் பெற்றிருக்கும் இவர், 2 முறை அரையிறுதி வரை முன்னேறினார். ஒருமுறை காலிறுதியில் தோற்றார். அந்த அளவுக்கு அசத்தலாகச் செயல்பட்டிருக்கிறார் இவர். இப்படியே சென்றால், அவரை யாராலும் தடுக்க முடியாதோ என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முக்கியக் காரணம், அல்கரஸ் புல்தரை, களிமண் தரை, ஹார்ட் கோர்ட் அனைத்து விதமான தரைகளிலும் அசத்துகிறார்.

கார்லோஸ் அல்கரஸ்

மூன்று வகையான கோர்ட்களிலுமே கிராண்ட் ஸ்லாம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் கூட அவர் வசம்தான் இருக்கிறது. புல்தரையில் அசத்திய ஃபெடரரால் களிமண்ணில் பெரிதாகத் தடம் பதிக்க முடியவில்லை. அங்கே களி மன்னனாய் விளங்கிய நடால் விம்பிள்டனில் 2 முறை மட்டுமே சாம்பியன் ஆனார். ஜோகோவிச் மட்டுமே அனைத்து ஏரியாக்களிலும் ஓரளவு சரிசமமாகச் செயல்பட்டிருக்கிறார். அல்கரஸ் அவரை விட, ஏன் அவரை விட ஒரு படி மேலேயே தன் திறமையை இந்த அரங்குகளில் காட்டுகிறார். களிமண்ணில் ரேலிகளாக ஆடி எதிராளிகளை வதம் செய்யும் இவர், புல்தரையின் வேகத்துக்கு மிகவும் சீக்கிரமே தன்னை தகவமைத்துக்கொள்கிறார். அதனால்தான் இரு துருவமாக இருக்கும் அந்த இரு கிராண்ட் ஸ்லாம்களையும் அவரால் அடுத்தடுத்து வெல்ல முடிந்திருக்கிறது.

டெக்னிக்கலாக முழுமையான ஆதிக்கம் செலுத்தும் அல்கரஸ், உளவியல் ரீதியாகவும் திடமாக இருக்கிறார். மிகவும் கடினமான தருணங்களில் தன் வயதுக்கும் மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஜோகோவிச்சுக்கு எதிராக 5 செட்களில் வெல்வதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. அதைக் கடந்த விம்பிள்டனில் செய்து காட்டினார் அல்கரஸ். அப்போது அவருக்கு வயது 20! இந்த பிரெஞ்சு ஓப்பனில் கூட ஸ்வெரவ்க்கு எதிராக 3 செட்கள் முடிவில் 1-2 எனப் பின்தங்கியிருந்தார். ஆனால், அசராமல் அடுத்த ஒரு செட்களையும் வென்று மகுடம் சூடினார். நடால், ஜோகோவிச் போன்றவர்கள் கடினமான தருணங்களில் எவ்வளவு திடமாக ஆடினார்கள், அந்த உறுதியை இவ்வளவு இளம் வயதில் காட்டிக்கொண்டிருக்கிறார் அல்கரஸ்.

கார்லோஸ் அல்கரஸ்

இப்படி இவர் முழுமையான வீரராக இருக்க, இவருக்கு இணையாகச் செயல்படக்கூடிய ஒரு வீரர் இல்லை என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை. இவருக்கும் சின்னர் போன்ற இந்தத் தலைமுறை வீரர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளி இப்போதைக்கு குறைவதாகத் தெரியவில்லை. போக, இப்போதுதான் இவருக்கு வயது 21. இவர் ஃபிட்னஸை மட்டும் சரியாகக் கவனித்துக்கொண்டால் அடுத்த 15 ஆண்டுகளில், ஆண்டுக்கு 1 கிராண்ட் ஸ்லாம் என்று வென்றால் கூட ஜோகோவிச்சை அசால்ட்டாகத் தொட்டுவிடுவார். அது மிகவும் எளிதாக நடந்துவிடுமோ என்றுதான் டென்னிஸ் பிரியர்கள் அஞ்சுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.