உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கி ஒன்றின் கிளையில் சர்வர் மீறல் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக அடையாளம் தெரியாத சைபர் திருடர்களால் ரூ.16.50 கோடி சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு 89 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், போலீஸ் அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை அன்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் (சைபர் க்ரைம்) விவேக் ரஞ்சன் ராய் கூறுகையில், “கடந்த ஜூன் மாதத்தில் 5 நாள்களில், இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். நைனிடால் வங்கியின் பிரிவு 62-ல் உள்ள கிளையின் ஐ.டி மேலாளர் இங்குள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
ஜூன் 16 முதல் 20 வரை சில அடையாளம் தெரியாத நபர்கள் வங்கியின் சேவையகங்களை ஹேக் செய்ததாகத் தெரிவித்தார். வங்கி மேலாளரின் லாக் இன் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை கட்டுப்படுத்த, ஹேக் செய்யப்பட்ட சர்வர்களை குற்றவாளிகள் பயன்படுத்தி, இதன் மூலம் வங்கியிலிருந்து ரூ.16.50 கோடியை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியிருக்கின்றனர். இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணையில், 89 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கை மேலும் விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சைபர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடித்துக் கைதுசெய்யவும், பணத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.