நீலகிரியில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நீலகிரியில் பரவலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக நிலவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 372 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவலாஞ்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொட்டபெட்டா மற்றும் பைன் ஃபாரஸ்ட் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காற்று, மழையின் தாக்கம் காரணமாக ஏற்படும் மண்சரிவு மற்றும் சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தெப்பக்காடு – மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. தொடர் மழையால் கடுமையான குளிர் நிலவிவருகிறது. மலை காய்கறி சாகுபடி பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.