பெங்களூரு: கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், வரும் 31-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரை திறப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரத்து 933 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 107.60 அடியாக உயர்ந்துள்ளது. ஹேமாவதி அணைக்கு 14 ஆயிரத்து 550 கன அடி நீரும், ஹாரங்கி அணைக்கு 12 ஆயிரத்து 827 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது.
மைசூருவில் உள்ள கபினி அணைக்கு விநாடிக்கு 29 ஆயிரத்து 360 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் கொள்ளளவு 19.25 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கு நன்மை: கர்நாடக துணை முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் கனமழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு இதுவரை 40 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல மழை பெய்தால் இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்சினையே ஏற்படாது. ஆனால், வறட்சி காலங்களின்போது நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காகவே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா முடிவெடுத்துள்ளது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். எனவே மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.