“கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும்…” – மின் கட்டண உயர்வுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “கர்நாடகாவைத் தொடர்ந்து தற்பேது தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி உள்ளது. இண்டியா கூட்டணி எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தேர்தலுக்கு முன் இனிக்கும் வாக்குறுதிகளை அளித்தன. ஆட்சிக்கு வந்த பிறகு சாமானிய மக்கள் மீது வரிகளை விதித்து, விலைவாசியை உயர்த்தி, அவர்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



ஏற்கனவே திமுக அரசு சொத்து வரியையும் குடிநீர் வரியையும் உயர்த்தி உள்ளது. பால் விலையையும் உயர்த்தி உள்ளது. கர்நாடகாவிலும் இதேபோல்தான். அரசு, மாநிலத்தை திவாலாக்கி இருக்கிறது. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், பால், குடிநீர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன. இதனால் எல்லாம் பாதிக்கப்படுபவர்கள் சாமானிய மக்கள்தான்.

தமிழ்நாட்டிலும் அரசு ஊழல் மிகுந்ததாக உள்ளது. சொந்த நலனுக்காகவே ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தார்கள். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். நாம் தமிழ் கட்சியின் நிர்வாகி கொல்லப்பட்டார். அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன. மக்களுக்கு அதிகம் தேவைப்படக்கூடிய பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இண்டியா கூட்டணியின் உண்மையான முகம் இதுதான்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.