மதுரை: தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறினார்.
தென்மண்டல காவல்துறை ஐஜியாக பணிபுரிந்த என்.கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டார். புதன்கிழமை அன்று மதுரையிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி பிரேம் ஆனந்த் கூறியதாவது: “தென் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு, சாதிய பிரச்சினை வராமல் தடுக்கப்படும். பழிக்கு, பழி கொலை நடக்காமல் இருக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க, பழைய நடவடிக்கை தொடரும். இது தொடர்பான நிலுவை வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்.
நகர் புறம், கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். நகர் பகுதி, நான்கு வழிச்சாலைகளில் விபத்துக்களை குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். நான்கு வழிச்சாலைகளில் 4 முனை சந்திப்பு பகுதியில் விபத்து தடுக்க, வைக்கப்படும் இருப்புத் தடுப்புகளை (பேரிக்கார்டு) முறைப்படுத்தி வைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படும்.
குறிப்பாக காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரு வோரை இன்முகத்துடன் வரவேற்று, உரிய உதவி, நடவடிக்கை எடுக்கப்படும். இதில் காவல் நிலைய வரவேற் பாளர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும். தென் மாவட்டத்திலுள்ள ரவுடிகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதன் மூலம் அவர்கள் கண் காணிக்கப்படும். தொடர் குற்றச்செயல்களில் ஈடு பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் மதுரை, ராமநாதபுரம் டிஐஜி துரை, திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார், மதுரை எஸ்பி ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே இவர், சிவகங்கை தேவகோட்டை, திருவாடனை, பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் மதுரை நகரில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.