• நாட்டை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக உயர்த்தும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும் – மல்வத்து பீடத்தின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர்.
• புத்தசாசனத்திற்கு பல நெருக்கடிகள் உருவாகியுள்ள இக்காலத்தில் இதுபோன்ற நிறுவனமொன்றை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது – அஸ்கிரி பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரங்பனாவ ஆனந்த தேரர்
• ஜனாதிபதி அலுவலகத்தில் பிக்கு ஒருங்கிணைப்புப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பங்களிப்புடன் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணத்துக்கு மத்தியில் இந்த அலுவலகம் இன்று (17) காலை திறந்து வைக்கப்பட்டது.
புத்தசாசனத்தைப் பாதுகாத்து முன்னெடுப்பது தொடர்பான அரசியலமைப்பு விதந்துரைகளுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இங்கு விசேட உபதேசமொன்றை நிகழ்த்திய மல்லுவத்து பீட அனுநாயக்க சாஹித்ய சக்ரவர்த்தி கலாநிதி வண. நியங்கொட விஜிதசிறி தேரர்,
”நாடு எதிர்நோக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார சவால்களை முறியடித்து இலங்கையை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு எப்பொழுதும் மகாசங்கத்தினரின் ஆசி கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
மகா சங்கத்தினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இந்த ஒருங்கிணைப்பு அலுவலகம் உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சியோமோ பாலிவம்சிக மகா நிகாயாவின் அஸ்கிரி பீட பிரதிப் பதிவாளர் ஆனந்த நாயக்க தேரரும் விசேட உபதேசம் ஒன்றை வழங்கியதுடன், சாசனத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் அரசாங்கத்தின் தலையீடு இன்றியமையாதது என சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இந்த புதிய பிக்கு நிலையத்தை திறந்து வைப்பது காலத்திற்கு உகந்த நடவடிக்கை என சுட்டிக்காட்டிய அவர், புத்தசாசனத்தின் உயர்ச்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்து வரும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
மேலும் இங்கு உரையாற்றிய மல்வத்து தரப்பு அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிடுகையில்,
”ஜனாதிபதி அலுவலகத்தில் பிக்கு ஒருங்கிணைப்புப் பிரிவை ஸ்தாபிப்பது மிகவும் பெறுமதியான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பணியாகும். எமது நாட்டில் புத்தசாசனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இப் பிரிவினால் பணியை மேலும் வினைத்திறனுடனும் அர்த்தத்துடனும் மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
விகாரைகளைப் பராமரித்தல், பாரம்பரிய தர்மப் போதனைகளைப் பாதுகாத்தல், இன்றுள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்த நிறுவனம் பயனுள்ளதாக இருக்கும். நாடு என்ற வகையில் இன்று நாம் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக, கலாசார சவால்களை வென்று இலங்கையை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு மகாசங்கத்தினரின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும்” என்றார் .
அஸ்கிரி மகாவிகாரை தரப்பு பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர்:
ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் பிக்குகள் ஒருங்கிணைப்புப் பிரிவை நிறுவும் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். தற்போதை காலகட்டத்தில் இவ்வாறான அலுவலகம் அமைக்கப்பட்டது முக்கியமானது. பிக்குமாருடைய தலைமைத்துவத்தைக் கருத்திற் கொள்ளாத சாசன விழுமியங்களைப் புறக்கணிக்கும் பல்வேறு சக்திகளினால் புத்த சாசனம் சார்ந்து பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
பௌத்த சாசன ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிக்குகள் தலையிட்டால் மட்டும் போதாது. அதற்கு அரசின் தலையீடு இன்றியமையாதது . எனவே, விசேடமாக பிக்குகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டின் அதிகாரிகளை தொடர்புகொள்வதற்காக இப்பிரிவை நிறுவுவது மிகவும் பொருத்தமானதாகும்.” என்று தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி அபயாராம விகாராதிபதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டு ஆனந்த நாயக்க தேரர்:
”பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் பிக்குகளை அடிப்படையாக வைத்து பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால் எதுவும் நிறைவேறுவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமூகத்தின் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு செயற்படும் தலைவர். பிக்கு என்ற பெயரில் இருக்கும் சில பிக்குமார்களினால் சாசனத்தின் ஒழுங்குக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு கடந்த நாட்களில் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் செயற்பட்டோம். அதற்கமைய இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் இந்த திட்டத்திற்கு மகா சங்கத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்” என்றார்.
கொழும்பு கோட்டை சம்புத்தாலோக மகா விகாரையின் விகாராதிபதியும் பாலி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் வண. இத்தேதெமழியோ, இன்தஸ்ஸர தேரர்,
”ஜனாதிபதி செயலகத்தில் பிக்குகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டமை பாராட்டுக்குரியதாகும். தூரப் பிரதேசங்களில் இருக்கும் பிக்குகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க இந்த அலுவலகத்தினால் முடியும்.
பிக்குகளுக்கான சாசன பாதுகாப்புச் சபையொன்று தற்போதும் உள்ளது. வேறு எந்தவொரு அமைப்பையும் அதற்கு நிகரானதாக கருத முடியாது. சாசனம் குறித்த அனைத்து விடயங்களையும் உள்வாங்கியே அந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினால் எவரும் பயனடைவதாக தெரியவில்லை. பேச்சு தர்மம் சார்ந்த போட்டிகளுக்கான அனுசரணைகளை மட்டுமே பெற்றுகொள்கின்றனர்.
தூரப்பிரதேசங்களில் இருக்கும் பிக்குகள் பற்றிய தகவல்களும் அந்த அமைப்பிடம் உள்ளது. சமூகத்துக்குள் தர்மம் தொடர்பிலான பல்வேறு புத்தங்கள் வௌியாகியுள்ளன. பிக்குகளின் நடத்தைகள் தொடர்பில் பேசப்படுகிறது. அதற்கான தீர்வுகளை எடுக்க முயற்சித்தாலும் விரைந்து அந்தச் செயற்பாடுகளை செய்வதற்கு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
அதனால் சாசன பாதுகாப்பு சபைகளுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்கினால், பிக்குகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அதனால் அரசாங்க அனுசரணையுடன் பிக்குகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் தத்துவக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் கந்தகொட விமலதம்ம அனுநாயக்க தேரர்,
”ஜனாதிபதி அலுவலகத்துக்குள் சாசன பாதுகாப்புக்கான அலுவலகம் ஒன்று திறக்கப்படுவது வரவேற்புக்குரியது. நாட்டின் பிரதான நிறுவனம் ஒன்றுக்குக்கு சாசன பாதுகாப்புக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதையும் வரவேற்கிறோம்.
இந்த முயற்சிக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையிலேயே தூரப் பிரதேசங்களிலிருந்தும் பிக்குகள் இங்கு வருகை தந்துள்ளனர். இன்று இவ்வாறான அலுவலகம் திறக்கப்பட்டது நாடு மட்டுமன்றி முழு உலகத்துக்கும் வழங்கப்படும் தகவலாகும்.” என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரிவெனா கல்வி பணிப்பாளர் வண வடினாபஹா சோமானந்த தேரர்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிக்குகளுக்காக இவ்வாறானதொரு அலுவலகம் திறக்கப்பட்டமைக்கு நன்றி சொல்கிறோம். இதனால் பிக்குகள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.
இதனால் மகா சங்கத்தினரின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு நேரடியாக தெரியப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதி பிக்குகளுக்கான கிரிவத்துடுவ வைத்தியசாலையை திறந்து வைத்த வேளையில் இவ்வாறதொரு அலுவலகத்தை திறப்பதாக உறுதியளித்தார். அதன்படி இந்த அலுவலகம் திறக்கப்பட்டது காலோசிதமான முயற்சியாகும்.” என்று தெரிவித்தார்.
சியாமோபாலிவங்கிஷிக மகா பீட ரோஹன பிரிவின் அனுநாயக்க ஒலங்கங்கொட புராண விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி ஓமாரே கஷ்யப்ப அனுநாயக்க தேரர்,
”சாசனதிற்காக இவ்வாறானதொரு அலுவலகம் திறக்கப்படுவது முக்கியமானது. அன்று முதல் சாசனத்துக்கு எழுந்திருக்கும் பிரச்சினைகள் காரணமாக சாசனத்தின் இருப்புக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கம் இதற்கு தீர்வு காண பல முயற்சிகளை எடுத்திருந்தாலும் தீர்வு கிட்டியதா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது. அதனால் சாசனத்தை பாதுகாப்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக இவ்வாறானதொரு புதிய அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார,
“ஆங்கிலேயர் காலத்தின் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு பிக்குளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்று திறப்பட்டிருப்பது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புக்குரிய நடவடிக்கையாகும்.
அண்மையில் கிரிவந்துடுவவில் பிக்குகளுக்கான வைத்தியசாலை திறக்கப்பட்ட போது இது பற்றி ஜனாதிபதி கூறியிருந்தார். அரசாங்கமும், மதமும் இரு பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பலரும் கூறுகிறார்கள்.
நாட்டில் உள்ளவர்களுக்கு தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார். தேவையில்லை என்று நினைப்பவர்கள் பின்பற்றாமலும் இருக்கலாம். அரசியலமைப்பிலும் அந்த உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு புத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
அதனை மாற்ற வேண்டுமென கூறப்படுவது அரசியலமைப்பு மீறலாகும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மகா சங்கத்தினர் பல விமர்ச்சனங்களை முன்வைத்துள்ளனர். அந்த விடயங்களை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி செயலாளரின் வழிகாட்டலின் கீழ் பிக்குகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் பங்கேற்ற பிக்குகளுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மதிய போசனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும்