தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா: கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட உள்ள சட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களை மட்டுமே நியமிப்பதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை இன்று (புதன்) ஒப்புதல் வழங்கி உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட், “தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இங்கே திறமையானவர்கள் இல்லாத நிலையில், வெளி நபர்களுக்கு வேலை வழங்குவதாக இருந்தால் அவர்கள் கர்நாடகாவில் தங்கி வேலை பார்க்க வேண்டும். கர்நாடகாவில் திறமையான நபர்கள் இருந்தால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



முன்னதாக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளை 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா 2024, கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, சட்டத்தின் விதிகளுக்கு முரணாக எந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் செயல்பட்டாலும் அவருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் மீறல் தொடர்ந்தால், மேலும் அபராதம் விதிக்கப்படும். மீறல் தொடரும் வரை ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம்” என்று மசோதா கூறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.