பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீதம் நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாக அல்லாத பணிகளிலும், 100 சதவீதம் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். மேலும் இடஒதுக்கீடு விதியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மசோதாவுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் மசோதாவின்படி, “கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர்” என வரையறுக்கிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் கன்னடத்தை ஒரு மொழியாகக் கொண்ட மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனையாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து, உள்ளூர் நபர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.
இந்த சட்டத்தில் இருந்து நிறுவனங்கள் தளர்வு பெற விண்ணப்பிக்க முடியும். எனினும், அந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் உள்ளூர் நபர்கள் நிர்வாக பதவிகளில் 25 சதவீதம் மற்றும் மற்ற பிரிவுகளில் உள்ள பதவிகளில் 50 சதவீத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்க தவறினால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.