நீலகிரியில் கனமழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 செ.மீ மழை பதிவு

உதகை: நீலகிரியில் கன மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முறிந்து விழும் மரங்கள் அவ்வப்போது வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

கன மழையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களை வனத்துறை மூடியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தொடர்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



அணைகளில் நீர்மட்டம் உயர்வு: அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளின் நீர் இருப்பு அதிகரித்து வருவதால் மின்வாரியத்தினர் ஆறுதலடைந்துள்ளனர். மழை தொடரும் பட்சத்தில் அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, முக்கூர்த்தி அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு 16 அடியாகவும், பைக்காரா, 100 அடிக்கு 65 அடியாகவும், சாண்டிநல்லா 45 அடிக்கு 35 அடியாகவும், கிளன்மார்கன் 33 அடிக்கு 27 அடியாகவும், மாயார் 17 அடிக்கு 16 அடியாகவும், அப்பர்பவானி 210 அடிக்கு 135 அடியாகவும் இருந்தது. இதேபோல், பார்சன்ஸ் வேலி அணையின் நீமட்டம் 77 அடிக்கு 52 அடியாகவும், போர்த்தி மந்து 130 அடிக்கு 95 அடியாகவும், அவலாஞ்சி 171 அடிக்கு 95 அடியாகவும், எமரால்டு 184 அடிக்கு 98 அடியாகவும், குந்தா 89 அடிக்கு 89 அடியாகவும், கெத்தை 156 அடிக்கு 152 அடியாகவும், பில்லுார் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு 95 அடியாகவும் இருந்தது.

உதகையில் நேற்று 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றின் வேகம் மணிக்கு 8.1 கிலோமீட்டர் என்று அளவில் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 95 சதவீதமாக இருந்தது.

நீலகிரியில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

உதகை – 58

நடுவட்டம் – 58

கிளன்மார்கன் – 40

குந்தா – 108

அவலாஞ்சி – 339

எமரால்டு – 125

அப்பர் பவானி – 217

கூடலூர் – 97

தேவாலா – 152

பந்தலூர் – 136

சேரங்கோடு – 125

கோடநாடு – 6

கீழ் கோத்தகிரி – 12

கோத்தகிரி – 6

செருமுள்ளி – 96

பாடந்தொரை – 102

ஓ வேலி – 98

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.