‘‘பாஜகவில் சிறுபான்மையினர் பிரிவை கலைத்துவிட வேண்டும்’’ – சுவேந்து அதிகாரி ஆவேசம்

கொல்கத்தா: பாஜகவில் உள்ள சிறுபான்மை பிரிவை கலைத்துவிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜகவின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய சுவேந்து அதிகாரி, “அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷத்தை நீங்கள் கூறி வருகிறீர்கள். ஆனால், அந்த கோஷத்தை இனி நான் சொல்ல மாட்டேன். மாறாக, யார் எங்களோடு இருக்கிறார்களோ நாங்கள் அவர்களுடன் இருப்போம் என்ற கோஷத்தையே நான் சொல்வேன். பாஜகவுக்கு சிறுபான்மையினர் பிரிவு தேவையில்லை. அந்தப் பிரிவை கலைத்துவிட வேண்டும்.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பல இந்து வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. முன்பு, எதிர்க்கட்சித் தொண்டர்கள், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தாக்கப்பட்டு வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், இப்போது பொதுவாக இந்து வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்படுகிறார்கள். எனது மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் உள்ள சுமார் 50 லட்சம் இந்து வாக்காளர்கள் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.



தேர்தலின்போது மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) அதிக அளவில் அனுப்பப்பட்டன. ஆனாலும், அவை மாநில நிர்வாகத்தால் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்படலாம். நான் வாக்குச் சாவடியை அடையாதபடி 50 ஜிஹாதி குண்டர்கள் எனது கதவை முற்றுகையிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது கருத்து குறித்து எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சுவேந்து அதிகாரி, “எனது அறிக்கை தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் ஆதரவாக இருக்கக்கூடிய தேசியவாதிகளுக்கு ஆதரவாக நாங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுடன் நிற்காத, தேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்படக் கூடியவர்களை நாங்கள் அம்பலப்படுத்துவோம். மம்தா பானர்ஜியைப் போல, மக்களை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினராக நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. அவர்களை இந்தியர்களாகப் பார்க்க வேண்டும். அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் பிரதமர் மோடியின் கூற்றை உணர்வுப்பூர்வமாக நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.