கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். அவர், எலும்பு சம்பந்தமான பிரச்னைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி காலையில் சென்றுள்ளார். தரைத்தளத்தில் புற நோயாளிக்கான சீட்டு வாங்கிய ரவீந்திரன், மருத்துவரை பார்க்க முதல் தளத்துக்கு லிஃப்டில் செல்ல முயன்றார். லிஃப்ட் கிரவுண்ட் ஃப்ளோரை நோக்கிச் சென்றதுடன் பாதியிலேயே நின்றுவிட்டது.
அச்சத்தில், அவசர உதவிக்கான அலாரம் பட்டனை அழுத்திப் பார்த்துள்ளார் ரவீந்திரன். அலாரம் ஒலித்த பின்னரும் யாரும் உதவிக்குச் செல்லவில்லை. லிஃப்டில் குறிப்பிடப்பட்டிருந்த அவசர உதவி எண்களுக்கு, தன் மொபைல் போனிலிருந்து தொடர்பு கொண்டுள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை.
ஒருகட்டத்தில், தன் மொபைலில் இருந்த சார்ஜ் தீர்ந்த நிலையில், தண்ணீர், உணவு இல்லாமல் லிஃப்டுக்குள் கிடந்துள்ளார் ரவீந்திரன். இனி தப்பிக்க வழியில்லை என முடிவுக்கு வந்த அவர், தன் மரணத்துக்கான காரணம் குறித்து ஒரு பேப்பரில் மரண குறிப்பு எழுதியிருக்கிறார். மூன்று நாள்கள் கழித்து, ஒருவழியாக அவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், “அந்த லிஃப்ட் ஏற்கெனவே ரிப்பேராகி இருந்திருக்கிறது. அது குறித்து அங்கு எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் நான் உள்ளே தனியாகச் சென்று சிக்கி இருக்க மாட்டேன். மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான், பலமுறை அலாரத்தை அழுத்தினேன். செல்போனில் அங்கு எழுதியிருந்த அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் அனைத்திற்கும் பலமுறை அழைத்துப் பார்த்தேன். யாரும் போனை எடுக்கவில்லை. மொபைலும் ஆஃப் ஆகிவிட்டது.
தப்பிக்க வழிதேடி, லிஃப்டின் கதவை திறந்து கீழே குதித்துவிடலாம் எனப் பார்த்தேன். அங்கு சுவர் தான் தெரிந்தது. லிப்டை இடித்துப் பார்த்தேன். கிரவுண்ட் ஃப்ளோரில் இறந்த பலரது உடல்களை கொண்டு செல்லும் அழுகுறல்கள் சத்தம் எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய உறவினர்கள் இறந்ததாகக் கூறி அழுது கொண்டிருந்தது மிகத் தெளிவாக எனக்குக் கேட்டது.
உணவில்லாமல், குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இனி தப்பிக்க வாய்ப்பு இல்லை, இறந்துவிடுவோம் என நினைத்தேன். என்னுடைய பையில் என் மனைவி எழுதிய சில கவிதை பேப்பர்கள் இருந்தன. அதில் ஒரு பேப்பரில் நான், என்னுடைய மரணத்திற்கான காரணம் குறித்து எழுதினேன்.
என் கை, கால்கள் தளர்ந்துகொண்டே இருந்தன. இரவா, பகலா என்பது தெரியவில்லை. இறந்துபோன என் அப்பா, அம்மா எல்லோரும் என் கண் முன்பு வந்துபோனார்கள். நான் இறந்துபோனால், எப்படி என் மூத்த மகனை எல்.எல்.பி படிக்க வைப்பது, இளைய மகனை பி.எஸ்சி ஜியாலஜி படிப்பை பூர்த்திசெய்ய வைப்பது என கலங்கினேன். இதையெல்லாம் மரணக்குறிப்பாக எழுதி அந்த பைக்குள் வைத்தேன். பேக்கை லிஃப்டின் கைப்பிடியில் தொங்கவிட்டேன். மரணம் என் கண்களில் தெரிந்தது.
நான் இறந்துவிட்டால், என் உடலை மீட்கக்கூட எத்தனை நாள்கள் ஆகும் என தெரியாது. அதற்கிடையில் உடல் அழுகி, பேக்கில் இருக்கும் பேப்பர்கள் நாசமாகிவிடக்கூடாது என்பதற்காக பையை உயரமான இடத்தில் வைத்தேன்.
ஒருவழியாக, மூன்று நாள்களுக்குப் பின் என்னை மீட்டவர் தேவ தூதனைப்போன்று என் கண்ணுக்குத் தெரிந்தார்” என்று கண்களில் நீர் பெருக கூறியுளார்.
தனது வழக்கமான வேலைகளுக்காக வந்த லிஃப்ட் ஆபரேட்டர் ஒருவருக்கு, ரவீந்திரன் லிஃப்டில் சிக்கிக்கொண்டிருப்பது பற்றி தெரிய வர, அதற்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.