பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே அருகே வசித்து வருபவர் சரத். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் ரூ.1.60 லட்சத்திற்கு மின்சார ஸ்கூட்டரை வாங்கி இருந்தார். அந்த ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகி வந்ததாக தெரிகிறது. அதாவது பேட்டரி பாதிக்கப்பட்ட அடிக்கடி சாலையோரம் அந்த ஸ்கூட்டர் நின்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சரத் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அந்த ஷோரூம், பிற மெக்கானிக் கடைகளுக்கு சென்று ஸ்கூட்டரை சரத் பழுது பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் நன்றாக ஓடும் ஸ்கூட்டர் மீண்டும் பழுதாகி உள்ளது. இதனால் விரக்தி அடைந்த சரத் அந்த ஸ்கூட்டரை வாங்கிய ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
அப்போது ஷோரூம் முன்பாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதற்கு சரத் தீவைத்தார். அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஸ்கூட்டரில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.