சென்னை: அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும் தமிழகம் முழுவதும் ஜூலை 25-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (ஜூலை 17) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டென் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திட வேண்டும். தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.
அதானி நிறுவனத்துக்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைத்திட வேண்டும். மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
இரண்டாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5-ம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்த போது திருவேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு என்கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல் துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.
குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என்கவுண்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழிமுறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரையறை ஆகும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.