புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 119 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 2021-ம் ஆண்டு முதல் 40 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஜம்மு பகுதியில் இருந்து பதிவாகியுள்ளன என்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்முவில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள டோடா மாவட்டத்தில் உள்ள தேசா வனப் பகுதியில் நேற்று (ஜூலை 16) தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் ஒரு அதிகாரி உட்பட உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தோடு சேர்த்து, 2021 முதல், பூஞ்ச், ரஜோரி, கதுவா, ரியாசி, டோடா மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 51 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் ஜம்முவில் நடந்த ஆறு தீவிரவாத தாக்குதல்களில் 12 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறையே 126, 103 மற்றும் 29 என்ற அளவில் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்த டோடா மாவட்டத்தில் நேற்று நடந்த தேடுதல் நடவடிக்கை உளவுத்துறை தகவலை அடிப்படையாகக் கொண்டு நடந்தது என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். கடந்த மூன்று வாரங்களில் டோடா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மூன்றாவது பெரிய என்கவுன்ட்டர் இது. 20 – 25 தீவிரவாதிகள் அடங்கிய தீவிரவாத குழு தேசா வனப் பகுதியை சுற்றிய 30-40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளனர். இவர்கள் குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், “இந்த தீவிரவாதிகள் அனைவரும் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. அவர்கள் இந்த வனப்பகுதியை நன்கு அறிந்துவைத்துள்ளனர். அதன்மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர். நேற்று நடந்த தாக்குதலுக்கு ‘காஷ்மீர் புலிகள்’ என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இது ஒரு போலி குழு. கடந்த காலங்களிலும் இதே குழு பல தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள நிலையில் சமீபத்திய தாக்குதல் சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2018 முதல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில் நவம்பர் 2023 முதல் முழுநேர காவல்துறை இயக்குநர் இல்லை. தற்போது டிஜிபியாக இருக்கும் ஆர்.ஆர்.ஸ்வைன், பொறுப்பு அதிகாரி மட்டுமே.
மேலும், 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு ஜம்மு பிரிவில் இருந்து ஏராளமான பாதுகாப்பு படையினர் திரும்பப் பெறப்பட்டு கிழக்கு லடாக்கிற்கு அனுப்பப்பட்டனர். இது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஜம்மு பகுதியில் உள்ள பழைய தீவிரவாதிகளை தொடர்புகொள்ள ஏதுவாக அமைந்தது என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், ராணுவமோ இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடந்த என்கவுன்ட்டரில் டோடாவைச் சேர்ந்த கடைசி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி மசூத் கொல்லப்பட்ட பிறகு, ஜூன் 29, 2020 முதல் ஜம்மு பிரிவின் ராம்பன், டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களை உள்ளடக்கிய செனாப் பள்ளத்தாக்கை,போராளிகள் இல்லாத பகுதி” என்று அறிவித்தது.
இந்த நிலையில் தான் போராளிகள் இல்லாத பகுதியான டோடா மாவட்டத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளன. இது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ராணுவத்தைத் தவிர, ஜம்மு காஷ்மீரில் சுமார் 60,000 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.