புதுடெல்லி: எகிப்து நாட்டைச் சேர்ந்த மேக்டி எய்ஸா என்பவர் 7 நாட்களுக்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு உலக சாதனை படைத்துள்ளார். தனது கனவு நிறைவேற கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கு வாழ்வில் எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக, உலக சாதனை படைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பலரும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து வருகிறார்கள். இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த மேக்டி எய்ஸா என்பவர் ஒரு வாரத்துக்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
45 வயதான மேக்டி எய்ஸா 6 நாட்கள் 11 மணி 52 நிமிடங்களில் புதிய சாதனை படைத்தார். உலகின் புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தினார். தனது கனவு நிறைவேற கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர் ஜேமி மெக்டொனால்டின் சாதனையை முறியடித்துள்ளார். தனது சவாலான அனுபவத்தை பகிர்ந்திருக்கும் அவர், “விமானங்கள், ரயில்கள், பேருந்துகள், சுரங்கப் பாதைகள் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்திலும் பயணித்தேன். ஒரே சிறு தடங்கல் முழு பயணத்தையும் தடம் புரள செய்துவிடும். இவை அனைத்தையும் தாண்டிதான் பயணிக்க வேண்டும்.
சீனப் பெருஞ்சுவரில் எனது பயணத்தைத் தொடங்கினேன். பின்னர் இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமின் கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் மச்சு பிச்சு மற்றும் இறுதியாக மெக்ஸிகோவில் உள்ள பண்டைய மாயன் நகரமான சிச்சென் இட்சா ஆகியவற்றை பார்வையிட்டேன். பயணத்தின்போது ஒவ்வொரு இடத்தையும் மேப்பிங் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒவ்வொருவரும் பயணத்தில் முதலீடு செய்ய வேண்டும். தங்கள் வாழ்வில் ஒரு கட்டத்தில் பெற வேண்டிய செழுமையான அனுபவம் இது” எனத் தெரிவித்துள்ளார்.