Doctor Vikatan: என் வயது 45. நான் தினமும் இரவில் ஆன்டி-ஏஜிங் க்ரீம் உபயோகிக்கிறேன். ஆனால், ஆன்டி-ஏஜிங் க்ரீமை தினமும் உபயோகிக்கக்கூடாது என சிலர் சொல்கிறார்களே… அப்படியா? வேறு என்ன உபயோகிக்க வேண்டும்? இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு படுத்துவிட்டு, காலையில் முகம் கழுவுவது சரியானதா? அது இளமையைத் தக்கவைக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
45 வயதில் சருமப் பராமரிப்பில் நீங்கள் அக்கறை காட்டுவது மிகவும் நல்ல விஷயம். அதற்காக உங்களுக்குப் பாராட்டுகள்.
ஆன்டி- ஏஜிங் (Anti-aging) க்ரீம்களில் பொதுவாக ரெட்டினால் (Retinol) சேர்க்கப்பட்டிருக்கும். ரெட்டினாலுக்கு இயல்பிலேயே சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, நீங்கள் பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீமில் மிகவும் குறைவான சதவிகிதத்தில் ரெட்டினால் இருந்தால் பிரச்னையில்லை.
ஒருவேளை உங்கள் க்ரீமில், ரெட்டினாலின் சதவிகிதம் சற்று அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதை நீங்கள் ஒருநாள் விட்டு ஒருநாளோ, வாரத்துக்கு இரண்டு நாள்களோ உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும். அதுவே, நீங்கள் அந்த க்ரீமை பல நாள்கள் உபயோகித்துவிட்டீர்கள், அது உங்கள் சருமத்தில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை என்றால், தொடர்ந்து உபயோகிக்கலாம்.
இதைத்தாண்டி, பெப்டைட்ஸ் (peptide) உள்ள க்ரீம் உபயோகிப்பதும் சருமத்துக்கு மிக நல்லது. அது சருமத்தை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. அதேபோல வைட்டமின் சி, நயாசினமைட்ஸ் (Niacinamide) போன்றவை உள்ள க்ரீம்களையும் உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு முன் உங்கள் சரும மருத்துவரை அணுகி, உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் தேவையைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனப்படும் கரும்படலம் இருக்கிறதா, வேறு பிரச்னை இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்து உங்களுக்கேற்ற ஆன்டி ஏஜிங் க்ரீமை மருத்துவர் பரிந்துரைப்பார்.
இரவு முழுவதும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு தூங்குவது நிச்சயம் சரியானதல்ல. தேங்காய் எண்ணெய் ஒருவிதமான மாய்ஸ்ச்சரைசர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் வெளியேறாமல் தடைசெய்யும். அதன் விளைவாக பருக்கள் போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, அதைத் தவிர்ப்பதே சிறந்தது. அதற்கு பதிலாக மருத்துவ ஆலோசனையோடு உங்களுக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.