மும்பை புறநகர் பகுதியான டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் குடியிருப்பு வளாகத்தில் நாகினா தேவி என்ற பெண் தூய்மைப் பணியில் ஈடுபட்டு இருந்தார். மூன்றாவது மாடியில் தனது வேலை முடிந்த பிறகு நாகினா தேவி தன்னுடன் வேலை செய்யும் நபர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். நாகினா தேவி கட்டடங்களுக்கு இடையிலான தடுப்பு சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் ஜோக்குகளை பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அந்நேரம் அவரது நண்பர் ஒருவர் நாகினா தேவியை வேகமாக கட்டிப்பிடித்தார். இதனால் பிடியை இழந்த அப்பெண், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை கட்டிப்பிடித்த நபரும் கீழே விழப்போனார். ஆனால் அதற்குள் அவரை மற்றவர்கள் பிடித்துக்கொண்டனர். இதனால் அவர் தப்பித்துவிட்டார். நாகினா தேவி கீழே விழுந்தவுடன் அவருடன் பணியாற்றியவர்கள் படிகளில் இறங்கி தரை தளத்திற்கு ஓடி வந்தனர்.
ஆனால் நாகினா தேவி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி இருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக அப்பெண் விழுந்தாரா அல்லது அவரை கட்டிப்பிடித்த நபர் வேண்டுமென்றே கீழே தள்ளிவிட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் நின்றவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.