கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் 20 அடி உயரத்திலிருந்து சண்டை பயிற்சியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நிகழ்ந்த இந்த விபத்தில் கீழே விழுந்த அவரை உடனே அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்திருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘சர்தார்’ முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், இயக்கத்தில் ‘சர்தார் 2’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அவினாஷ், யுகி சேது, பாலாஜி சக்திவேல் என முந்தைய படத்திலிருந்த நடிகர்களே கமிட்டாகி நடித்துவருகின்றனர்.
நேற்று இதன் படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கியது. ஆக்ஷன் சீக்குவென்ஸ்களுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் சண்டைக்காட்சிகள் எடுத்து வந்தனர். அப்போதுதான் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்டன்ட் கலைஞரான ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்திருக்கிறார். விழுந்த வேகத்தில் அவருக்கு மார்பு பகுதியில் அடிபட்டிருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனின்றி இறந்ததாகச் சொல்கிறார்கள். கார்த்தி உட்படப் பலரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதனால் படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டனர்.
இறந்த ஏழுமலையின் குடும்பத்தினரைப் படக்குழு இன்று நேரில் சந்தித்து வேண்டிய உதவிகள் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.