மும்பை: உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது என்று ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் கூறிய கருத்துக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.
ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அண்மையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், “துரோகம் செய்வது மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் நாங்கள் அனைவரும் வேதனையடைந்தோம். வஞ்சகம் செய்பவன் இந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக்கொள்பவனே இந்து” என்று தெரிவித்திருந்தார்.
ஏக்நாத் ஷிண்டேவின் பெயரை நேரடியாக சங்கராச்சாரியார் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் துரோகி என்று குறிப்பிடுவது ஷிண்டேவைத்தாம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் சங்கராச்சாரியாரின் இந்த கருத்துக்கு தனது எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ள நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், “அரசியலில் கூட்டணி அமைப்பது, ஒரு கட்சியில் பல பிரிவுகள் இருப்பது பொதுவானதும், அரசியலமைப்புக்கு உட்பட்டதும் ஆகும். காங்கிரஸ் கட்சியில் கூட முதலில் 1907ல், பிறகு 1971ல் பிளவு ஏற்பட்டது.
ஓர் அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பனை செய்வாரா? ஓர் அரசனே தன் குடிமக்களை சுரண்ட தொடங்கினால் துரோகம்தான் இறுதி வழி என்று நம் மதமே கூறுகிறது. சங்கராச்சாரியார் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குற்றம்சாட்டியதன் மூலம் நம் அனைவரது உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார். மேலும் இது போன்ற விஷயங்களைப் பேசி இந்து மதத்தையும் அவமதித்து விட்டார்.” என்று கங்கனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.