மஞ்சூர்: உதகை அருகே உள்ள இத்தலாரில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக கூறினார்.
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம் இத்தலார் ஊராட்சி ஹட்டி பகுதியில் தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமசந்திரன், “தென்மேற்கு பருவ மழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. மழையால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. மீட்பு பணிகளுக்காக 3 மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இத்தலார் ஹட்டி பகுதியில் சுமார் 20 மீட்டருக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால், அங்கு உள்ள 10 வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக வெட்டி அப்புறுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடலூர், பந்தலூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என ராமசந்திரன் கூறினார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌஷிக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், இத்தலூர் ஊராட்சி தலைவர் பந்தையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.