ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜவளகிரி பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 18) ஜவளகிரி வனத்தில் இருந்து வெளியேறிய 3 யானைகள் பனசமானதொட்டி கிராமப் பகுதியில் சுற்றித் திரிந்தன. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமேஷ் (40) என்பவர் விவசாய நிலத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 யானைகளில் ஒரு யானை பரமேஷை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரமேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நம்மிடம் பேசுகையில், “ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கடந்த சில தினங்களாக விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் எங்களால் நிலங்களுக்கு சென்று விவசாய பணிகள் செய்ய அச்சமாக உள்ளது. யானைகளை வனத்துறையினர் உடனடியாக அடர்ந்து வனப்பகுதிக்கு விரட்டி இருந்தால், உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருக்காது. இனி மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், அந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்” என்றனர்.