இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் கல்வி பிரிவிடமிருந்து ஆதரவு பெற்றுக்கொள்ளும் ஆதேவேளை அதற்கான மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் மேம்பட்ட கல்வி முறையொன்றை நாட்டில் உருவாக்கி, இந்நாட்டு பிள்ளைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்க எதிபார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மொனராகலை புதுருகல மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த போது மாணவர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களினால் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
மேலும், ஜனாதிபதி மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெறுமதியான இசைக்கருவிகளும் மிகக் குறுகிய காலத்திற்குள் வழங்கி வைக்கப்பட்டதையிட்டு மாணவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 96 உறுப்பினர்கள் மாணவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பாராளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தலைமையில் நடைபெற்றது.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“இந்த மாணவர் பாராளுமன்றத்தின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்காலத் தலைவர்கள் உருவாவர். அதற்காக இங்கிருந்து பெரும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றங்கள் இயங்கி வருவது மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் வரலாற்று மற்றும் புராதன பின்னணியை மாணவர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி, மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். அதனையடுத்து அரசியலமைப்புச் சபை மற்றும் பாராளுமன்ற முறைமை தொடர்பிலும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அதனைடுத்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து விளக்கினார்.
மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய அதிபர் எச்.எம்.யூ.பி. ஹேரத், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.