பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண், தனது 25 வார கருவை கலைக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’என் மனுதாரர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகி இருக்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பது 24 வாரங்களைக் கடந்த பிறகுதான் தெரிய வந்தது. மனுதாரருக்கு 21 வயது மட்டுமே ஆகி இருப்பதால் அவரது எதிர்காலத்தை கருத்தில் கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்கவேண்டும்’ என்று கோரினார்.
இம்மனு நீதிபதி வினோத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ”மனுதாரர் மருத்துவக் குழுவின் முன் ஆஜராகி இருக்கிறார். அதன் அடிப்படையில் மருத்துவக் குழு அப்பெண்ணை ஆய்வு செய்து இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, கரு உயிருடன் பிறக்க நேரிடலாம் என்றும், அது பிழைக்க 50% – 70% வாய்ப்பு இருக்கிறது என்றும், எனில் அதற்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளை கருத்தில்கொண்டு மனுதாரரின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
உடனே, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’வேறு ஒரு மருத்துவமனையில் அப்பெண்ணின் கரு குறித்து கருத்துக் கேட்ட போது குழந்தை உயிரோடு இல்லாமல் பிறக்க வைக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ குழுவின் அறிக்கையில், கருக்கலைப்பின்போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், கருக்கலைப்பு தோல்வியில் முடிய வாய்ப்பு இருப்பதாகவும், அப்படியே செய்தாலும் ஆபரேஷன் அவசியமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ’’பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் என்ற போதிலும், பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு கர்ப்பத்தை கலைக்க அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யவேண்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்லாது அவரது வயிற்றில் இருக்கும் கருவையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதோடு, அக்கரு உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.
கருக்கலைப்பின்போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. மேலும் அவ்வாறு கருக்கலைப்பு செய்தாலும் ஆபரேஷன் மூலம் அது செய்யப்பட வேண்டியிருப்பதால் அதிலும் ஆபத்துகள் இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
25 வாரத்தை கடந்த சிசு, கர்ப்பப்பைக்கு வெளியில் வாழ 70% அளவுக்கு வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெண் தேவைப்பட்டால் மீண்டும் மருத்துவக் குழுவிடம் சோதனை செய்து கொள்ளலாம். அவர்கள் கருக்கலைப்புக்கு சம்மதம் தெரிவித்தால், கருவை கலைத்துக்கொள்ளலாம்” என்று நீதிபதி தெரிவித்தார்.