திருமலை திருப்பதி குறித்தப் புதிய தகவல்களை எங்கேனும் வாசித்தால் உடனே அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பலரிடமும் உள்ளது. காரணம், திருப்பதி, இந்தியாவின் ஆன்மிகத் தலங்களில் முக்கியமானது. தினமும் சராசரியாக 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் இந்தத் தலத்துக்கு நாடுமுழுவதும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். எனவே கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தரிசன டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே பக்தர்கள் பெற முடியும் என்கிற கட்டுப்பாட்டை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அனைவரும் தங்களின் தரிசன நேரம் மட்டும் நாளை முடிவு செய்து பின் திருப்பதி வந்து தரிசனம் செய்தால் அது தேவையற்ற கால விரயங்களைத் தவிர்க்கும். இருந்தாலும் ஆன்லைனில் புக் செய்ய இயலாத சாமானியர்களுக்காக இலவச தரிசனமும் தொடர்ந்துவருகிறது.
கோவிட் 19 பரவலுக்குப் பின் பல மாற்றங்களை தேவஸ்தானம் செய்தது. அவற்றில் ஒன்று மூத்த குடிமக்கள் தரிசன நேரத்தை மாலை 3 மணிக்கு மாற்றியது. தற்போது வாட்ஸ் ஆப்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் தினமும் இரண்டு வேளைகளில் தரப்பட உள்ளது என்கிற செய்தி பரவி வருகிறது.
அந்த வாட்ஸ்அப் செய்தி:
திருப்பதியில் சந்திரபாபு நாயுடுவின் முதல் சீர்திருத்தம்………
திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி! 65 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி. மூத்த குடிமக்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா @ திருமலை இலவச தரிசனம். இரண்டு இடங்கள் சரி செய்யப்பட்டன. ஒன்று காலை 10 மணிக்கு, மற்றொன்று மாலை 3 மணிக்கு. புகைப்பட ஐடியுடன் வயதுச் சான்றிதழைச் சமர்ப்பித்து S1 கவுண்டருக்குப் புகாரளிக்க வேண்டும். பாலத்திற்கு கீழே உள்ள கேலரியில் இருந்து கோவிலின் வலது சுவருக்கு சாலையைக் கடக்கவும். நீங்கள் எந்த படிக்கட்டுகளிலும் ஏற வேண்டியதில்லை. சிறந்த இருக்கைகள் கிடைக்கும். நீங்கள் அமர்ந்தவுடன், சூடான சாம்பார் சாதம், தயிர், சாதம் மற்றும் சூடான பால். இவை அனைத்தும் இலவசம். டெம்பிள் எக்சிட் கேட்டில் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்து, கவுன்ட்டரில் உங்களை இறக்கிவிட பேட்டரி கார் உள்ளது. பார்க்கும்போது மற்ற அனைத்து வரிசைகளும் முடக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் மட்டும் எந்த அழுத்தமும், வற்புறுத்தலும் இல்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசன வரிசையில் இருந்து 30 நிமிடங்களுக்குள் நீங்கள் தரிசனத்தை விட்டு வெளியேறலாம். TTD Helpdesk திருமலையை 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் சிறப்பு அறிவிப்பு: பகிரவும்.
இது மிகவும் பயனுள்ளது.
எத்தனை பெரியவர்களிடம் இந்தத் தகவல் உள்ளது?
அனைத்து குழுக்களையும் சென்றடையவும்!
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி வாட்ஸ்அப் மட்டுமின்றி சில சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
இதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள திருமலை திருப்பதி இணைய தளத்தைப் பார்வையிட்டோம். அதில் இதுபோன்ற எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் மூத்த குடிமக்களுக்கான அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்கள் வரும் 23.7.24 அன்று காலை 10 மணி முதல் புக்கிங் தொடங்கும் என்பதும் தெரியவந்தது. அப்படியானால் சீனியர் சிட்டிசன்களுக்கான எந்தச் சலுகையும் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்று தெரியவருகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கான தரிசன நேரம் மாலை 3 என்பதே தொடர்கிறது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். அவர்கள், சீனியர் சிட்டிசன்கள் தரிசனம் குறித்த வாட்ஸ்அப் செய்தியை முழுமையாக மறுத்தனர். சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றபின் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்கிற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் இதுபோன்ற தவறானத் தகவல்களைப் பரப்புகின்றனர். எனவே மூத்த குடிமக்கள் யாரும் இதை நம்பி திருமலைக்கு வரவேண்டாம். அனைத்து டிக்கெட்களையும் தற்போது இணையம் மூலமே பெறமுடியும் என்றனர்.
எனவே மேலே கூறப்பட்ட வாட்ஸ்அப் தகவல் தவறானது. அதை நம்பி சீனியர் சிட்டிசன்கள் யாரும் திருமலை செல்ல வேண்டாம்.