உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குருவான போலே பாபா என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட பெண்கள், குழந்தைகள் என சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சத்சங்கத்தை ஏற்பாடு செய்தவர்களில் 9 பேர் தற்போதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்த கூட்டத்துக்கு முக்கிய காரணமான சாமியார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி தற்போதுவரை கைது செய்யப்படவில்லை. சிக்கந்தராவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கூட சாமியாரின் பெயர் குற்றவாளியாக குறிப்பிடவில்லை. அதைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில், போலே பாபா என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜூலை 2-ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் ஆழ்ந்த மன உளைச்சலில் இருக்கிறோம். ஆனால் விதியைத் தவிர்க்க யாரால் முடியும்? விதிக்கப்பட்டதை யாராலும் தவிர்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்க வேண்டும். இறக்கும் நேரமும் உறுதியாகவே இருக்கிறது. கூட்டத்தின் மீது ஏதோ ஒரு விஷம் தெளிக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.
இந்த உயிரிழப்புகளுக்கு பின்னால் சதி இருக்கிறது. இந்த சோகமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்களை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி), நீதித்துறை ஆணையம் மற்றும் மனித நல்லிணக்க சங்கத்தின் ஆதரவாளர்கள் அம்பலப்படுத்துவார்கள் என முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த சம்பவத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருடனும் நாங்கள் நிற்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.