கேரளாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வடக்கு உள் வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், கேரளாவில் இன்னும் 5 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வயநாடு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதியான நாளை கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுளது. இதையடுத்து கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்டு யானை ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம் அருகே உள்ள பூயங்குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் காட்டு யானை ஒன்று இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். யானை ஆற்றில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சியில் யானை துதிக்கையை உயர்த்தியிருக்கவில்லை. துதிக்கையை உயர்த்தியபடி சென்றிருந்தால் சுவாசித்தபடி உள்ளதாக கருதலாம். எனவே யானை இறந்த நிலையில் ஆற்றில் இழுத்துச் செல்லப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். வனத்துறை ஊழியர்கள் ஆற்றில் படகில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆற்று வெள்ளம் பூதத்தான் அணைக்கட்டு நோக்கிச் செல்வதால், யானை அணைக்கட்டுக்குள் செல்வதற்குள் மீட்கும் முயற்சியை துரிதப்படுத்தினர். தொடர்ந்து யானையின் உடலை வெள்ளத்தின் போக்கிலேயே தள்ளி கரைக்கு கொண்டுவந்தனர். யானையின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பின் புதைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக ஆற்றைக் கடந்து செல்வது வழக்கம் எனவும், நேற்று காட்டுக்குள் பலத்த மழை பெய்த நிலையில் யானை வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் எனவும், அப்போது யானையின் தலைப்பகுதி பாறையின் மீது மோதியதால் இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டாற்று வெள்ளத்தில் யானை அடித்துச் செல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.