Tabu: "வயசாயிருச்சு, அதனால் என்னால் நடிக்க முடியாது!"- நடிகை தபு சொன்னது ஏன்?

‘இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை’ என்று நடிகை தபு கூறியிருக்கிறார்.

தமிழில் குறைந்த படங்களிலே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமானவர் தபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அதிகப் படங்களிலும் நடித்து வரும் தபு தற்போது அஜய் தேவ்கனுடன் இணைந்து ‘Auron Mein Kahan Dum Tha’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘Auron Mein Kahan Dum Tha’

இந்நிலையில் படம் தொடர்பான பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தபு ” 30 வயது பெண் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த வயதுடைய கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நிராகரித்து விட்டேன். இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. என் வயதை ஒட்டிய கதாபாத்திரங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து படத்தில் உங்களின் இளம் வயது கதாபாத்திரத்தில் வேறொருவர் நடித்துள்ளாரே என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ” ‘Auron Mein Kahan Dum Tha’ படத்தின் கதையை இயக்குநர் நீரஜ் பாண்டே என்னிடம் சொன்னபோது முதலில் இளம் வயது கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்றுதான் கேட்டேன். அதற்கு அவர் அந்த கதாபாத்திரத்தில் வேறொருவர்தான் நடிக்கிறார் என்று கூறினார்.

அதனால்தான் இந்த படத்திற்கு ஓகே சொல்லி விட்டேன். சில சமயங்களில் பார்வையாளர்களுக்கு திரையில் நடிக்கும் நடிகர்களின் உண்மையான வயது தெரியும்போது, நீங்கள் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அது வேடிக்கையாக இருக்கும். நாம் தற்போது எப்படியிருக்கிறோம் என்பதை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.