வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென ஒரு நபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது வலது காதில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்
இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரம்ப் தனது காதில் பேண்டேஜ் அணிந்தபடி குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த நிலையில் மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்டு டிரம்பின் பேத்தி 17 வயதான காய் மேடிசன் டிரம்ப்பை அவரது தந்தை ஜூனியர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்தார். தொடர்ந்து மேடையில் காய் மேடிசன் டிரம்ப் பேசியதாவது;-
“என்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல்தான். எனது பெற்றோருக்கு தெரியாமல் மிட்டாய்களை வாங்கித் தருவார். எனது கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார். அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதரால் மற்றொரு மனிதர் மீது இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்த முடிகிறது என்பதை நினைக்கும்போது மிகுந்த கவலையளிக்கிறது.
எனது தாத்தாவை பலரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து அவர் இன்று வரை நின்று கொண்டிருக்கிறார். அவர் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா ஒவ்வொரு நாளும் போராடுவார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.