IND vs SL T20 Probable Playing XI: இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட உள்ளது. ஜூலை 27, 28, 30 ஆகிய மூன்று நாள்களில் மூன்று டி20 போட்டிகளும், ஆக. 2, 4, 7 ஆகிய மூன்று நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த தொடர்களுக்கான இந்திய அணியின் ஸ்குவாடுகள் நேற்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடைபெறும் முக்கிய வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் என்பதால் சீனியர் வீரர்கள் பலர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 அரங்கில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்ததால் சீனியர் – ஜூனியர் கலவையுடன் டி20 ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட்டுக்கு பின் சுப்மான் கில்…
அதிலும் டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி தற்போது சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பொறுப்பை சுப்மான் கில் பெற்றுள்ளார். சுப்மான் கில் ஓடிஐ தொடரிலும் துணை கேப்டன் பொறுப்பை பெற்றிருக்கிறார். விராட் கோலிக்கு பின்னர் ஒரு பெரும் நட்சத்திரமாக கில்லை வளர்த்தெடுக்க பிசிசிஐ திட்டமிடுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
டி20இல் இவர்களுக்கு வாய்ப்பில்லை
விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க டி20 அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அதிரடி ஓப்பனர் அபிஷேக் சர்மா, அனுபவ வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களான ஆவேஷ் கான், முகேஷ் குமார் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விக்கெட் கீப்பிங் பேட்டர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதிகமாகும் ஆப்ஷன்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றிருப்பதால் அபிஷேக் சர்மாவுக்கும், கில்லின் ஆக்கிரமிப்பால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் இந்திய அணியில் இடமில்லை எனலாம். ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோரை இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. இதனால் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆப்ஷன்கள் அதிகமாகும். ஃபினிஷிங்கிற்கு ரின்கு சிங் மற்றும் மிடில் ஆர்டர் பேக்அப் ஆக ரியான் பராக்கையும் இந்தியா வைத்திருக்கிறது. பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்?
அந்த வகையில், இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எந்த வகையில் அமைக்கப்படும், கௌதம் கம்பீர் – சூர்யகுமார் யாதவ் காம்போ முதற்கட்டமாக யார் யாருக்கெல்லாம் வாய்ப்பை வழங்கும் என்ற கணிப்புகளை இங்கு காணலாம்.
சந்தேகமே இன்றி சுப்மான் கில் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்குவார்கள். ஒன் டவுணில் ரிஷப் பண்ட், டூ டவுணில் சூர்யகுமார் யாதவ் என கடந்த டி20 உலகக் கோப்பை ஃபார்முலாவையே கம்பீர் தொடர்வார் எனலாம். இதன்பின்னர்தான் இந்திய அணியில் குழப்பமே பின் இருக்கும். ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல் ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதால் அங்கு 5ஆவது அல்லது 6ஆவது இடத்திற்கே பெரும் போட்டி நிலவும் எனலாம்.
ஒரு இடத்திற்கு மூவர் போட்டி
இந்த இடத்திற்கு ரியான் பராக், சிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கடும் போட்டியளிப்பார்கள். சஞ்சு சாம்சன் ரிஷப் பந்தின் பேக்அப் ஆகவே இருப்பார். இந்த மூவருமே பந்துவீச்சு ஆப்ஷனையும் வைத்துள்ளனர். தூபே, சுந்தர் ஆகியோர் சர்வதேச அளவில் பந்துவீசி பழக்கப்பட்டிருந்தாலும், ரியான் பராக்கிற்கு அந்தளவிற்கு இதில் அனுபவம் இல்லை. டி20 உலகக் கோப்பையில் இருந்து தூபேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை ஓடிஐ அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லாத நிலையில், தூபே இடம்பிடித்துள்ளார்.
இதனால் முன்னணி வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தூபே பார்க்கப்படுவதால் டி20 அணியில் அந்த இடத்தில் தூபேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். சுந்தர், ரியான் பராக் ஆகியோரும் ஓடிஐ அணியில் இடம்பிடித்திருக்கின்றனர் என்றாலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலேயே இவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம். பந்துவீச்சு பிரிவில் ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள். கலீல் அகமது பேக்-அப் ஆகவே இருப்பார். எனவே, முதற்கட்டமாக சஞ்சு சாம்சன், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது ஆகியோர் வெளியே அமரவைக்கப்படுவார்கள் எனலாம்.
டி20 அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு
சுப்மான் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.