புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை, பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உணவக உரிமையாளர்கள், தங்கள் பெயர்களைக் காட்டும் பெயர்ப்பலகைகளை அமைக்க ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரித்வார் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் பத்மேந்திர டோபல், “கன்வார் வழித்தடத்தில் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள், உணவகங்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உரிமையாளரின் பெயரை எழுத வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி உள்ளோம். அதைச் செய்யத் தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதனால், பல நேரங்களில், தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். அவற்றை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு உணவகங்களும் அல்லது தள்ளுவண்டி உணவுக்கடைகள் உட்பட தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும்.
கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கன்வர் யாத்திரை ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரபிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, முசாபர்நகர் மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு இதே உத்தரவை உணவகங்களுக்கு விதித்தது. இது மாநிலத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. “மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு கேடு விளைவிக்கும். மாநிலத்தின் இணக்கமான சூழலை கெடுக்கும்” என முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் அசாதுதீன் ஓவைஸி போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் முசாபர்நகர் காவல்துறை அந்த உத்தரவை ரத்து செய்தது. காவல்துறையால் ரத்து செய்யப்பட்ட ஒருநாள் கழித்து தற்போது உத்தரபிரதேச மாநில அரசு அதே உத்தரவை திரும்பப் பிறப்பித்துள்ளது.