புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றுள்ளது.
வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. 0-49மதிப்பெண் (ஆசைப்படுபவர்), 50-64 மதிப்பெண் (முன்னேற செயல்பட்டுக் கொண்டிருப்பவர்), 65 -99மதிப்பெண் (முன்னிலை வகிப்பவர்), 100 மதிப்பெண் (சாதனையாளர்) என மாநிலங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 13 இலக்குகளில் தமிழ்நாடு முன்னிலை பிரிவில் உள்ளது. 11 இலக்குகளில் தமிழ்நாட்டின் மதிப்பெண் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
2020-21 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மதிப்பெண் 74-ஆக இருந்தது. தற்போது அது 78-ஆக உயர்ந்துள்ளது. தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ளது.
மலிவான மற்றும் சுத்தமான எரி ஆற்றல் இலக்கில் தமிழ்நாடு 100 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பில் 92 மதிப்பெண் பெற்று முன்னிலை வகிக்கிறது. வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி 72 ஆகும்.
பாலின பகுபாடு இலக்கில் 53 மதிப்பெண், நீர் வளம் இலக்கில் 61 மதிப்பெண் பெற்று ‘செயல்படுபவர்’ பிரிவில் தமிழ்நாடு உள்ளது. நிலையான நகரங்கள், நிலவளம் ஆகிய இரண்டு இலக்குகளில் தமிழ்நாடு தேசிய சராசரியைவிடவும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது.
நிலையான நகரங்கள் இலக்கில் தேசிய சராசரி மதிப்பெண் 83 ஆகஉள்ள நிலையில் தமிழ்நாடு 81 மதிப்பெண்ணும், நில வளம் இலக்கில் தேசிய சராசரி மதிப்பெண் 75 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 72 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மகப்பேறு சமயத்தில் தாய்மார்களின் இறப்புவிகிதம் 1 லட்சத்துக்கு 54 ஆகவும்,5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 13 ஆகவும்உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் உள்ளன.
கல்வியில் தமிழ்நாடு மிக மேம்பட்ட நிலையில் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி57.6 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 81.5 சதவீதமாக உள்ளது. அதேபோல், கல்லூரி சேர்க்கையில் தேசிய சராசரி 28.4 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அது 47 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 81.87% குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன. அதேபோல், 92.8 சதவீத குடும்பங்களில் ஒருவரிடமாவது மொபைல் போன் உள்ளது.
வேலையின்மை விகிதம் 4.8 சதவீதமாகவும், 15 – 59 வயதுக்குட்பட்டவர்களில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 62.3 சதவீதமாகவும் உள்ளது.