புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ‘Blue Screen of Death (BSOD)’ எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது” என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதென்ன CrowdStrike சிக்கல்?: – Crowdstrike என்பது சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆகும். கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் இந்த Crowdstrike, விண்டோஸ் சாப்ட்வேரில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி, ரியல் டைமில் பாதுகாப்பு சிக்கல்களை கிளவுட் அடிப்படையிலான ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இந்த நிறுவனம் விண்டோஸில் தீர்வுகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்த Crowdstrike-ன் சமீபத்திய அப்டேட்டில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் எனப்படும் Blue Screen of Death எரர் இணைக்கப்பட, அது உலகம் முழுவதும் விண்டோஸ் சேவை பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்ந்தது. Crowdstrike-ன் கடைசி அப்டேட் வியாழக்கிழமை இரவு வந்துள்ளது. இதன் எரர், Falcon சென்சாரில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை Crowdstrike நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், “இது சைபர் தாக்குதல் கிடையாது. எங்கள் குழுக்கள் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம். பிரச்சினையை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், நிரந்தர தீர்வு செயல்படுத்தப்படும் வரை பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று அதன் நிறுவனர் ஜார்ஜ் கர்ட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிக்கலை எவ்வாறு சரி செய்வது? – CrowdStrike-ன் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த எரர் ஏற்பட்டுள்ளது. எனினும் மற்றொரு அப்டேட் மூலம் இந்த சிக்கலை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவரை, இதனை சரிசெய்வதற்கான செயல்முறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்டோஸ் 10-ல் தற்போது ஏற்பட்டுள்ள BSOD சிக்கலைச் சரிசெய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
1.விண்டோஸ் இயங்குதளத்தை ஷேப் மோட் (Safe Mode) அல்லது WRE மோடில் பூட் செய்யுங்கள்.
2. C:\Windows\System32\drivers\CrowdStrike-க்கு செல்லவும்.
3.”C-00000291*.sys” என்ற பைலை கண்டுபிடித்து, டெலிட் செய்யவும்.
4. இறுதியாக எப்போதும் போல் இயங்குதளத்தை பூட் செய்யவும்.
விமான சேவைகளில் கடும் பாதிப்பு: விண்டோஸ் செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய விமான சேவையிலும் சேவை பாதிப்பின் தாக்கம் உள்ளது. வின்டோஸ் சிக்கலால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1,000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானங்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஆகியுள்ளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது? – மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மைக்ரோசாப்ட் சிக்கல் தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.