கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்துவதற்காக ஃபாஸ்டேக் (FASTag) பொருத்தியிருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன் மூலம், சுங்கச் சாவடிகளில் ஆட்டோமேட்டிக் முறையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படும். ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் நேரடியாகவும் டோல் கட்டணம் செலுத்தலாம்.
இந்த நிலையில், ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்கு புதிய விதிமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஃபாஸ்டேக் ஒட்டாதவர்களிடம் இருமடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு சுங்கச் சாவடிகளில் கார் ஓட்டுநர்கள் வாகனத்தில் ஃபாஸ்டேக் ஒட்டாமல் கையிலேயே வைத்திருப்பதாக புகார்கள் வந்திருக்கின்றன.
இதனால், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தேவை இல்லாமல் நேரம் தாமதமாகிறது. இதனால் மற்ற வாகனங்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான், ஃபாஸ்டேக் ஒட்டாதவர்களிடம் இருமடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து சுங்கச் சாவடிகளிலும் எச்சரிக்கை பலைகள் வைக்கப்படும் என நெடுஞ்சாலை ஆனையம் தெரிவித்துள்ளது.
வாகனத்தில் ஃபாஸ்டேக் ஒட்டாமல் தொடர்ச்சியாக சுங்கச் சாவடிகளுக்கு வரும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
வாகனத்தில் ஃபாஸ்டேக் ஒட்டாமல் கையில் ஃபாஸ்டேக் வைத்திருந்தால், மின்னணு முறையில் டோல் கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படாது.
மேலும், ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகளும் ஃபாஸ்டேக் வழங்கும்போதே வாகனத்தில் ஒட்டப்படுவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆக, இரட்டிப்பு டோல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க வாகனத்தில் உடனடியாக ஃபாஸ்டேக் ஒட்டிவிட வேண்டும் என்பதை கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருப்பது நல்லது!