Kanwar Yatra: `யாத்திரை வழித்தடத்திலுள்ள உணவகங்களின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்' – யோகி உத்தரவு

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கன்வார் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த யாத்திரை இந்த ஆண்டு வரும் 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 6-ம் தேதி முடிகிறது. இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஒரு யாத்திரை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் தொடங்கி ரிஷிகேஷ் அல்லது உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாக்பட் என்ற இடத்தில் இருக்கும் மகாதேவ் சிவன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இது போன்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மொத்தம் 4 வழித்தடங்களில் கன்வார் யாத்திரை செல்லும். இந்த யாத்திரையின்போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த யாத்திரை செல்லும் வழித்தடங்களில் அசைவ உணவு விற்பனை செய்யப்படுவதை உத்தரப்பிரதேச அரசு கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால் அளித்த பேட்டியில், “முஸ்லிம்கள் இந்து பெயரில் உணவகங்கள் நடத்திக்கொண்டு, அதில் அசைவ உணவுகளை விற்பனை செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டி இருந்தார்.

கன்வார் யாத்திரை

இதையடுத்து கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என்று முஜாபர்பூர் போலீஸார் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் அந்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

அதே சமயம் இப்போது அதே உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்கள், சாலையோர தாபாக்கள், உணவு வண்டிகளில் அவற்றின் உரிமையாளர்கள் பெயர் கட்டாயம் இடம் பெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

யோகி ஆதித்யநாத்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் போலீஸ் கண்காணிப்பாளர் பிரமோத் சிங் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ”உணவகங்கள், தாபாக்கள், தெரு உணகங்களில் அதன் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர், க்யூ ஆர் கோட், மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் கட்டாயம் இடம் பெற்று இருக்கவேண்டும். அவ்வாறு இடம் பெறாத உணவகங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.